Tamilசெய்திகள்

ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் துடைத்து விட முடியாது என்றாலும் நமது சமூகநீதி போராட்டத்தை தொடர்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று இரவு நடந்தது.

இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி.பெல்லார்மின் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் வரவேற்று பேசினார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகி இருக்கக்கூடிய தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு விழாவில் நான் பங்கெடுப்பதில் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

இன்றைய திராவிட மாடல் அரசானது உயர்கல்விக்கு, ஆராய்ச்சிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி. நம்மை ஏன் இன்றைக்கு சிலர் எதிர்க்கிறார்கள்? காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை இவர்கள் உயர்த்துகிறார்களே என்பதால் தான் எதிர்க்கிறார்கள்.

வீட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டிய பெண்ணுக்கு இலவச பஸ் பயணத்திற்கு ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்களே என்ற காரணத்தால் தான் எதிர்க்கிறார்கள். படிக்க வரும் பெண் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்களே என்பதால் தான் எதிர்க்கிறார்கள். மற்றவர்கள், அதாவது நாம் எல்லாரும் முன்னேறுவது இவர்களுக்கு பிடிக்கவில்லை. அனைவரையும் நாம் முன்னேற்றுவது இவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள். இதை பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள் ஆகும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் 1924-ம் ஆண்டு வைக்கத்துக்குச் சென்று போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத்தைத் தொடங்கி, அதில் அனைவரும் கைதான பிறகு – இந்தப் போராட்டம் நின்று விடக் கூடாது என்ற நோக்கத்தோடு, தந்தை பெரியார் வைக்கம் சென்று போராடினார். மனைவி நாகம்மையாரையும் அழைத்து வந்தார்.

தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களை அழைத்து வந்து போராடினார். இறுதியில் வெற்றியும் பெற்றார். அந்த போராட்டம் தான் எனக்கு ஊக்கமளித்த போராட்டம் என்று அண்ணல் அம்பேத்கர் எழுதி இருக்கிறார். அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம்.

கேரள முதல்-மந்திரிக்கு வேண்டுகோள் கேரளா முதல்-அமைச்சர், நம்முடைய மரியாதைக்குரிய பினராயி விஜயன் இங்கு வந்திருக்கிறார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானாக எதுவும் மாறிவிடவில்லை. நமது தலைவர்களால், நமது முன்னோடிகளால், அவர்களது போராட்டங்களால், தியாகங்களால் தான் அனைத்தும் மாறி இருக்கிறது. சமூக அழுக்குகளை சட்டத்தாலும் மாற்ற வேண்டும். மனமாற்றத்தாலும் மாற்ற வேண்டும். அரசுகள் சட்டம் போட வேண்டும். சீர்திருத்த எண்ணம் கொண்டவர்கள் இது போன்ற விழாக்களின் மூலமாக மனமாற்றங்களை உருவாக்க வேண்டும். ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் மொத்தமாக துடைத்து விட முடியாது தான். ஆனாலும் நமது சமூகநீதி போராட்டத்தைத் தொடர்வோம்.

இவ்வாறு பேசினார்.