Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – தென் ஆப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 17 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஒல்லி போப் 73 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், நூர்ஜே 3 விக்கெட்டும், ஜேன்சேன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் எர்வி 73 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜேன்சேன் 48 ரன்னிலும், கேப்டன் எல்கர் 47 ரன்னிலும் அவுட்டாகினர்.

இங்கிலாந்து சார்பில் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து தடுமாற்றத்துடன் விளையாடிது. அந்த அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லீஸ், ஸ்டுவர்ட் பிராட் தலா 35 ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க சார்பில் நூர்ஜே 3 விக்கெட்டும், ரபாடா, மகராஜ், ஜேன்சேன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது.