Tamilவிளையாட்டு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டி – அக்டோபர் மாதம் கொச்சியில் தொடங்குகிறது

11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது.

தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது. அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி நடக்கிறது.

2 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிக்கான அட்டவணையில் புதிதாக ‘பிளே-ஆப்’ சுற்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும். புள்ளி பட்டியலில் 3-வது முதல் 6-வது வரை இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இவற்றில் இருந்து மேலும் இரு 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.