Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு அபராதம்

இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஓவல் டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

3-வது நாள் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆண்டர்சன் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் கேட்ச் பிடித்தார். நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இங்கிலாந்து டி.ஆர்.எஸ்.சுக்கு சென்றது. டெலிவி‌ஷன் மூலம் ராகுல் பேட்டில் பந்து பட்டு கேட்ச் ஆகியிருந்தது தெரிய வந்தது. டி.ஆர்.எஸ். மூலம் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

ஆனால் ராகுல் மைதானத்தை விட்டு உடனே வெளியே செல்லாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து வீரர்களின் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 15 சதவீதம் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ராகுலின் ஒழுக்க நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.