Tamilசெய்திகள்

இந்திய குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வதற்கான இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார். ஆனால் அமல் படுத்தப்படாமல் இருந்து வந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.

அதன்படி நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பெரும்பாலான மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், தங்களது மாநிலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம் செய்வதற்காக இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. indiancitizenshiponline.nic.in இந்த இணைய தளத்தில் சென்று மக்கள் விண்ணப்பம் செய்யலாம்.