Tamilசெய்திகள்

இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் – எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

அ.தி.மு.க. யாருக்கு சொந்தம்? என்கிற சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். இரட்டை இலை சின்னமும் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திலேயே அ.தி.மு.க. போட்டியிட்டது. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி பாராளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை பாராளுமன்றத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ? என்கிற அச்சம் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, பின்னர் ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்வானது. இதன் பின்னர் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது. ஆகியவற்றை எதிர்த்து சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இப்படி வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கக்கூடாது என்று கடந்த மாதம் 12-ந் தேதி மனு அளித்திருந்தார்.

அந்த மனு மீது தேர்தல் ஆணையம் பதில் அளிக்காததால் அதுபற்றி உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சூரியமூர்த்தி வழக்குப் போட்டுள்ளார். இது வருகிற 25-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே சூரியமூர்த்தி அளித்துள்ள மனு குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாகவே இரட்டை இலை சின்னத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. மூத்த வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வக்கீல்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கருத்துக்களை கேட்டறிந்தார். இது தொடர் பாக அ.தி.மு.க. மூத்த வக்கீல் ஒருவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் தான் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாத சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தில் ஆன்லைன் மூலமாக உடனடியாக மனு அனுப்ப உள்ளோம். இது ஒரு பெரிய விஷயமே இல்லை.

இரட்டை இலை சின்னத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.