Tamilசெய்திகள்

இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை மாற்றும் நோக்கில் புதிய 3 மசோதாக்கள் அறிமுகம் – கபில் சிபில் கண்டனம்

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

இந்த மசோதாக்கள் குறித்து மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியதாவது:-

அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவது தான் நாட்டின் பிரச்சனை. எங்கெல்லாம் பா.ஜனதா ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்கப்படும். அதிகாரத்தில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வழிகாட்டுதல்படி காவல்துறை பெருமளவில் செயல்படுகிறது.

இந்த சூழலில் 60 முதல் 90 நாட்கள் போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை காவலில் வைக்கிறீர்கள் என்றால், அது பேரழிவுக்கானதாகும். தேசத்துரோக சட்டம் மாற்றப்பட்ட விதம், தேசிய பாதுகாப்பு தொடர்பான விதிகளை நடைமுறைப்படுத்துவது, தேசிய பாதுகாப்பிற்காக எந்த சூழ்நிலையில் ஒரு நபர் மீது வழக்கு தொடரலாம் என்பதை வரையறுக்காமல் காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுத்து, மறுபுறம் மக்களை மௌனமாக்குவதை ஏற்க முடியாது” என்றார்.

முன்னதாக, 1898-ம் ஆண்டு, குற்றவியல் நடைமுறை சட்டமும் (சிஆர்.பி.சி.), 1872-ம் ஆண்டு இந்திய சாட்சியங்கள் சட்டமும் கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான குற்றச் செயல்களுக்கு இந்த சட்டங்களில் தான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேற்கண்ட 3 சட்டங்களை மறுசீரமைத்து, புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவர 3 மசோதாக்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இந்திய தண்டனை சட்டத்துக்கு பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா மசோதா-2023, குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு பதிலாக பாரதீய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மசோதா-2023, இந்திய சாட்சியங்கள் சட்டத்துக்கு பதிலாக பாரதீய சாக்யா மசோதா-2023 ஆகிய மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 3 மசோதாக்களையும் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது குற்றவியல் நீதிமுறை, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டங்களால் இயங்கி வருகிறது. ஆங்கிலேயர்கள், அவர்களது வசதிக்கேற்ப அச்சட்டங்களை உருவாக்கி உள்ளனர். அவர்களது ஆட்சியை பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் அவற்றை உருவாக்கி உள்ளனர்.

அந்த சட்டங்களின் நோக்கம், தண்டிப்பதாகத்தான் உள்ளது. நீதி வழங்குவதாக இல்லை. தங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கி உள்ளனர். இந்த குறைகளை போக்கி, தற்கால தேவைகளை கருத்தில் கொண்டு, 3 புதிய குற்றவியல் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளோம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கால சட்டங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 302-வது இடத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த சட்டங்களில் முதல் அத்தியாயத்திலேயே இடம்பெற்றுள்ளது. புதிய மசோதாக்களில், தேச துரோக குற்றம் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பிரிவினை செயல்கள், ஆயுத புரட்சி, நாசவேலைகள், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து விளைவித்தல் ஆகிய புதிய குற்றச்செயல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கும்பலாக சேர்ந்து கொலை செய்தல், சிறுமிகளை கற்பழித்தல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும். கூட்டு கற்பழிப்புக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவர்கள் சந்திக்கும் சமூக பிரச்சினைகள் போன்றவற்றுக்கு பாரதீய நியாய சன்ஹிதா மசோதாவில் தீர்வு காணப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகவோ, வேலை, பதவி உயர்வு பெற்று தருவதாகவோ ஆசைவார்த்தை காட்டி பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது குற்றமாக கருதப்படும். இப்படி கருதப்படுவது இதுவே முதல்முறை. சிறிய குற்றங்களுக்கு முதல் முறையாக சமூக சேவை செய்வது, தண்டனைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. பொய் வழக்கு என்ற குற்றச்சாட்டை தவிர்க்க, தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நடவடிக்கைகளின்போது வீடியோ எடுப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வீடியோ எடுப்பது விசாரணையின் முக்கிய அங்கமாக இருக்கும்.

இந்த மசோதாக்கள் மூலம் நமது குற்றவியல் நீதிமுறையில் புரட்சிகர மாற்றம் ஏற்படும் என்று இச்சபையில் உறுதி அளிக்கிறேன். இந்திய குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் உணர்வு, இவற்றில் இருக்கும். மசோதாக்களின் நோக்கம், நீதி அளிப்பதுதான். தண்டனை அளிப்பது அல்ல. குற்றங்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே தண்டனை அளிக்கப்படும். விரைவாக நீதி வழங்கவும், தற்கால தேவைகள் மற்றும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் இம்மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், 3 மசோதாக்களையும் உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவை அமித்ஷா கேட்டுக்கொண்டார். பாரதீய நியாய சன்ஹிதா மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமல், வஞ்சக எண்ணத்துடன், திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டால், அது கற்பழிப்பாக கருதப்படாத போதிலும், அத்தகைய நபர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். வஞ்சக எண்ணம் என்பது வேலை வாங்கித்தருவதாகவோ, பதவி உயர்வு பெற்றுத்தருவதாகவோ ஆசைவார்த்தை காட்டுதல், உண்மையான அடையாளத்தை மறைத்து திருமணம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றையும் குறிக்கும்.

ஆபாச படங்களை வெளியிடுவது என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவான குற்றமாக கருதப்படும். அதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். கொலை குற்றத்துக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும். கற்பழிப்பு குற்றத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும். கூட்டு கற்பழிப்புக்கு 20 ஆண்டுகள் சிறை அல்லது இயற்கையாக மரணம் அடையும் வரையோ தண்டனை விதிக்கப்படும்.

ஒரு பெண், கற்பழிப்புக்கு பிறகு இறந்தாலோ அல்லது நிரந்தர பாதிப்பு அடைந்தாலோ, குற்றவாளிக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாமல் கடும் தண்டனை விதிக்கப்படும். அது, ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படும். அதாவது, அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் இருக்க வேண்டி இருக்கும். 12 வயதுக்கு குறைவான சிறுமி கற்பழிக்கப்படும்போது, குற்றவாளிக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அது, அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை நீட்டிக்கப்படலாம்.

கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத தண்டனை விதிக்கப்படும். அது, ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். அபராதமும் விதிக்கப்படும். போலீஸ் அதிகாரியோ, அரசு ஊழியரோ அல்லது ஆயுதப்படைகளில் பணியாற்றுபவரோ கற்பழிப்பில் ஈடுபட்டால், அவருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அது, ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.