Tamilசெய்திகள்

இந்திய ரெயில்வேவின் முதல் பெண் தலைவராக ஜெய வர்மா சின்ஹா தேர்வு

இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு ரெயில்வே கட்டமைப்பகளை நிர்வகிப்பது இந்திய ரெயில்வே. இது இந்திய அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது.

சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் பயண பாதையை உள்ளடக்கிய இந்திய ரெயில்வே, உலகிலேயே 4-வது பெரிய ரெயில்வே கட்டமைப்பை நிர்வகிக்கும் சிறப்பு பெற்றுள்ளது. மேலும் இது, கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி வருவாயை ஆண்டொன்றிற்கு ஈட்டி வருகிறது.

இதன் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியுமாக செயல்படுபவரே இதன் ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கும் பொறுப்பானவர் என்பதால் இப்பதவி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பெருமைக்குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. தற்போது அனில் குமார் லஹோட்டி இப்பதவியை வகித்து வருகிறார்.

விரைவில் ஓய்வு பெறும் இவருக்கு அடுத்து இந்த பதவிக்கான அதிகாரி நியமனம் குறித்து தேர்வு நடைபெற்று வந்தது. இந்திய ரெயில்வேயின் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த இந்த பதவிக்கு ஜெய வர்ம சின்ஹா என்பவரை இந்திய அரசாங்கம் தேர்வு செய்து நியமித்துள்ளது. இந்த உயர்ந்த பதவியை ஏற்கும் முதல் பெண்மணி ஜெய வர்ம சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்திய ரெயில்வேயின் செயலாக்கம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஜெய வர்ம சின்ஹா, இந்திய ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை அரசாங்கத்தின் நியமனங்களுக்கான கேபினெட் கமிட்டியும் உறுதி செய்துள்ளது” என இது குறித்து அரசு அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் 1 அல்லது அதற்கு பிறகு பொறுப்பேற்க இருக்கும் ஜெய வர்ம சின்ஹா, 2024 ஆகஸ்ட் 31 வரை இந்த பதவியில் தொடர்வார். அக்டோபர் 1 அன்று இப்போது அவர் வகிக்கும் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெய வர்மா, மீண்டும் புதிதாக அதே நாளில் தலைமை செயல் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்.

1988-ல் இந்திய ரெயில்வே டிராஃபிக் சேவையில் சேர்ந்த ஜெய வர்மா அலகாபாத் பல்கலைகழகத்தில் பயின்றவர். வடக்கு ரெயில்வே, தென்கிழக்கு ரெயில்வே மற்றும் கிழக்கு ரெயில்வே ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவம் உள்ள இவர் இந்தியாவின் அண்டை நாடான வங்களாதேசத்தின் ரெயில்வே சேவைக்கு ஆலோசகராகவும் பணி புரிந்தார்.

இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து வங்களாதேச தலைநகர் தாகாவிற்கான மைத்ரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இவரது வங்களாதேச பணியின் போது தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.