Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் – நஜம் சேதி தகவல்

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்த இதற்கான வரைவு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடுமா? என்பதே இன்னும் சந்தேகத்தில்தான் உள்ளது. குஜராத்தில் மோதுவது போன்ற அட்டவணைக்கு பாகிஸ்தான் தரப்பில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சேர்மன் நஜம் சேதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்தியா, பாகிஸ்தான் அணிகளை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் இந்தியா செல்ல வேண்டுமென்றாலும், இந்தியா பாகிஸ்தான் வர வேண்டும் என்றாலும் இரண்டு நாடுகளுக்குரிய அரசாங்கம்தான் முடிவு எடுக்க முடியும். குஜராத் மைதானத்தில் மோத வேண்டுமா? வேண்டாமா? என்பதையும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அகமதாபாத்தில் விளையாடுவது குறித்து எங்களிடம் கேள்வி கேட்க ஏதும் இல்லை.

இவ்வாறு தெரிவித்தார்.

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் பாகிஸ்தானில்தான் நடைபெறுவதாக இருந்தது. இந்தியா அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனால் 13 போட்டிகளில 4 மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. மற்ற 9 போட்டிகள் இலங்கையில் நடத்தப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆசியகோப்பை போட்டி குறித்து கூறுகையில் ”இந்தியா பாகிஸ்தான் வர மறுத்ததால் தீர்வுகாண ஹைபிரிட் முறையில் இரு நாடுகளில் போட்டி நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் மேலும் சில போட்டிகள் நடத்த வாய்ப்பு இருந்தது. ஆனால், இங்கு விளையாடிய பின், இலங்கை செல்வது கடினம் என்பதால் போட்டி குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.