Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று  (அக்.18) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.

இதில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐ.சி.சி. உலகக் கோப்பையில் சேப்பாக்கம் மைதானத்துக்கு 5 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன. கடந்த 8-ந் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், 13-ந் தேதி நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தன. சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுவது 3-வது போட்டியாகும்.

நியூசிலாந்து தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நெதர்லாந்தை 99 ரன் வித்தியாசத்திலும் , 3-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தையும் வீழ்த்தி இருந்தது. நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் இன்றும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி ஆப்கானிஸ்தானை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியின் போது நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் எஞ்சிய 3 ஆட்டத்தில் விளையாடமாட்டார். டாம் லாதம் இன்றைய போட்டிக்கு கேப்டனாக பணியாற்றுவார்.
பேட்டிங்கில் கான்வே (229 ரன்), ரச்சின் ரவீந்திரா (183), மிச்சேல் (137) ஆகியோ ரும், பந்துவீச்சில் சான்ட் னெர், மேட் ஹென்றியும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இருவரும் தலா 8 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. அதே போல நியூசிலாந்து அணிக்கும் அதிர்ச்சி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டி யில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோற்றது. 3-வது போட்டியில் தான் இங்கிலாந்தை வென்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கில் ரகுமானுல்லா குர்பாஸ் (148 ரன்), கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி (112), அஸ்மத்துல்லா ஓமாராசி (103 ரன்), ஆகியோரும் பந்துவீச்சில் ரஷீத்கான் (5 விக்கெட்), முஜிபுர் ரகுமான் (3 விக்கெட்) ஆகியோரும் சிறப்பான நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் மோதிக்கொள்வது இது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றது. 2015 உலக கோப்பையில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2019 உலக கோப்பையில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.