Tamilசெய்திகள்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக புதன்கிழமை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

சென்னையில் கடந்த மாதம் 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. ஆனால் 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவை மீறி நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி அனுமதி பெற்று நாளை மறுநாள் (6-ந்தேதி) புதன்கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்வதாக இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு அறிவித்து உள்ளது.