Tamilசெய்திகள்

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் கோரிக்கை

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் 4 முறை உங்களிடம் (சபாநாயகர்) சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும். எனவே எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறும்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உங்களிடம் (சபாநாயகர்) தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதற்கு நீங்களும் பதில் சொல்லி வருகிறீர்கள்.

முன்னாள் சபாநாயகர் தனபாலு தீர்ப்பை சுட்டிக்காட்டி நீங்களும் பதில் கூறி உள்ளீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவண செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.