Tamilசெய்திகள்

எந்தவித ஆவணங்கள் இன்றி மியான்மரில் இருந்து 718 பேர் மணிப்பூரில் நுழைந்தனர்

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறன்றன.

ஒருபக்கம் வன்முறை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் மியான்மரில் இருந்து எந்தவித ஆவணங்களும் இன்றி 700-க்கும் மேற்பட்டோர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளது அம்மாநில அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய-மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 22 மற்றும் 23-ந்தேதியில் 718 பேர் வந்துள்ளனர். அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று அசாம் ரைபிள் மியான்மருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது மணிப்பூரில் அசாதாரண சூழ்நிலை இருந்து வரும் நிலையில், எப்படி அனுமதித்தீர்கள் என்று விளக்கம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக மணிப்பூர் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இதுபோன்ற சம்பவங்கள் முன்னதாக நடைபெற்றபோது, மியான்மரில் இருந்து மணிப்பூருக்கும் வருவோரிடம் முறையான விசா, தெளிவான ஆவணங்கள் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு சார்பில் அசாம் ரைபிள் படைக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மணிப்பூரில் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில், 718 பேர் நுழைந்துள்ளது மிகவும் தீவிரமான விசயமாக பார்க்கப்படுகிறது.

மணிப்பூர் எல்லைக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்று அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் மியான்மரில் இருந்து வந்தவர்களை உடனடியான வெளியேற்றும்படி அசாம் ரைபிள் படையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வந்துள்ளவர்களின் பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.