Tamilவிளையாட்டு

ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைவதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் காரணம் – முன்னாள் வீரர் சாபா கரீம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 17-ந் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கி நவம்பர் 19-ந் தேதி முடிகிறது. இதற்காக அனைத்து அணியினரும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணி 2013-ம் வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் பல தொடர்களில் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இந்நிலையில் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் காரணம் என முன்னாள் வீரர் சாபா கரீம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

டாப் ஆர்டர்தான் இந்திய அணியின் பெரிய பலம். ஆனால் நாம் எப்படி செயல்படப்போகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கின்றது. நான் இதுவரை பார்த்த வரையில் பெரிய போட்டிகள், முக்கியமான போட்டிகளில், அல்லது ஐசிசி தொடர்களில் இந்தியாவின் டாப் ஆர்டர்தான் சொதப்புகின்றனர். எனவே அதுதான் இந்திய அணி கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எனவே வரவிருக்கும் ஆசியக்கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட வேண்டும். ரெகுலராக இவர்கள் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டும். குறிப்பாக பெரிய போட்டிகளில் இவர்கள்தான் ஆட வேண்டும்.

ஆகவே ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் 3 அல்லது 4 வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற வேண்டியது அவசியம். இவர்களிடத்தில் ஏகப்பட்ட அனுபவம் உள்ளது. ஷுப்மன் கில்லை அனைத்து வடிவ வீரர் ஆக்கியுள்ளோம். அவர் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க இதுதான் சிறந்த வாய்ப்பு எனவே அவரும் கிடைத்த வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த வேண்டும்.

கில் மிக முக்கியமான வீரர். ஏனெனில் ரோகித் சர்மா தொடக்கத்தில் மெதுவாகவே ஆடுவார். பிறகுதான் விளாசத்தொடங்குவார். அந்தத் தருணங்களில் சுப்மன் கில்தான் ரன் ரேட்டைத் தக்கவைக்க வேண்டும். சில வேளைகளில் ரோகித் சர்மா தொடக்கத்திலிருந்தே அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுகிறார். இது ரிஸ்கான விஷயம். ஆனால் ஆசிய கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மா நின்று ஆடி கடைசி வரை நிற்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆகவே ஷுப்மன் கில் மீது அதிக சுமை உள்ளது. அவர் ஆடும் விதம் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அவருக்கு இது முக்கியமான தொடர்களாகும்.

இவ்வாறு சாபா கரீம் கூறுகிறார்.