Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் 2023 – கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கொல்கத்தாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 3 சிக்சர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கான்வே மீண்டும் அரை சதமடித்து அசத்தினார். அவர் 40 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 56 ரன்கள் குவித்தார். அடுத்து இறங்கிய ரகானே, ஷிவம் டூபே ஜோடியும் ஈடன் கார்டன் மைதானத்தில் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டது.

ஷிவம் டூபே 21 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 ரன்னில் வெளியேறினார். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. ரகானே 71 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக ஜாசன் ராய் அரை சதம் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ரங்கு சிங் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். நிதிஷ் ராணா 27 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களும், ஆண்டிரே ரசல் 9 ரன்கள் எடுத்தனர். உமேஷ் யாதவ் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்நிலையில், இந்த போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.