Tamilசெய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக 2 நாட்கள் சிறப்பு முகாம்கள்

தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.7.2023 அன்று தர்மபுரியில் தொடங்கி வைத்தார்.

விண்ணப்பதிவு முகாம்களை 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 20,765 ரேசன் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட முகாம்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 2-ம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த 2 முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் வருகிற 19-ந்தேதி, 20-ந்தேதி ஆகிய 2 நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரி பார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பதாரர்கள் கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.