Tamilசினிமா

கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் – நடிகர் சிவகுமார்

திரைக்கலைஞர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக 12-ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ -மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார்.

‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ. 2,50,000 (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் ) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியதாவது, 1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து 12-ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் பவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.

கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.