Tamilசினிமா

நெய்தல் நிலப் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘கும்பாரி’!

இந்த படத்தில்  விஜய் விஷ்வா, நலீப் ஜியா ,  மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப்.

ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசை அமைப்பாளர்களாக ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர், படத்தொகுப்பாளராக  டி.எஸ்.ஜெய், நடன இயக்குநராக ராஜுமுருகன்,சண்டை இயக்குநராக மிராக்கல் மைக்கேல் ,கலை இயக்குநராக சந்தோஷ் பாப்பனாங்காடு, பாடல் ஆசிரியர்களாக வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி  ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஆதரவற்ற ஒருவனும் அனாதைச் சிறுவனும்  சிறு வயதிலிருந்து நட்பு கொள்கிறார்கள். பிறகு அது இறுகி உறுதியான பிணைப்பாக  மாறுகிறது.மீன்பிடிக்கும் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

ஒரு நாள் வேறு ஊரைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அவள் கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் உதவி கேட்கிறாள். இதைப் பார்த்து மனம் பதைபதைத்துப் பரிதவித்தாலும் உதவ வராமல் தயங்கி நிற்கிறார்கள். என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா என்று கதறுகிறாள் அவள்.ஆனால் யாரும் வரவில்லை. அனைவரும் தயங்கி நிற்கிறார்கள். இது நாயகனுக்குத் தெரிகிறது அவளும் நாயகனிடம் முறையிடுகிறாள். அவன் அவளைத் துரத்தி வந்த அந்தக் கும்பலை  அடித்து துவம்சம் செய்கிறான். அடி வாங்கிய அவர்களோ பதில் விளைவு காட்டாமல் சிரிக்கிறார்கள்.நாயகன் புரியாமல் நிற்கிறான்.

இதில் என்ன கொடுமை என்றால் அந்த, துரத்தப்பட்ட இளம் பெண்ணும் சிரிக்கிறாள்.காரணம் அது ஒரு பிராங்க் ஷோவாம். இப்படி பொதுமக்கள் உணர்ச்சிகளோடு விளையாடும் அவர்களின் வியாபார நோக்கமறிந்து கொதிக்கிற நாயகன்,இப்படிப் போலியாக நடிக்கும் செயல்களால் உண்மையான ஆபத்து வரும்போது யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்று நாயகியை  ஓங்கி அறைந்து விடுகிறான்.இப்படிப்பட்ட வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற வெளிப்படையான குணம் கொண்ட நாயகன்  மீது காதலில் விழுகிறாள்.அவள்காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓட… அதன்பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் ‘ கும்பாரி’ படத்தின் கதை.

படம் பற்றித் தயாரிப்பாளர் குமாரதாஸ் பேசும்போது,”இது ஒரு பயணத்தில் செல்லும் காதல் கதை.சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை ‘போல் காதலர்கள் செய்யும் பயணம் தான் இப்படம்.. காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்சன் என அனைத்தும்  கலந்த முழு நீள எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி உள்ளது என்கிறார்.

கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம். இந்தப் படம் ஒரு காதல் கதை தான் என்றாலும் நட்பை பற்றியும் இப்படம் பேசுகிறது. நட்பைப் பற்றி இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் ஒரு நட்பதிகாரமே படைக்கும் வகையில் உள்ளது.

குமரி மண்ணின் அழகும், மண்மணம் மணக்கும் மொழியும், பாடல்களும் படத்திற்கு வேறு நிறம் காட்டுகின்றன.இப்படத்தில் காதல், நகைச்சுவை, நட்புடன் கலந்து சமகாலச் சமூகப் போக்கையும் பிரதிபலித்துக் கதை உருவாகியுள்ளது.

’கும்பாரி’ படத்தின் படப்பிடிப்பு கடலும் கடல் சார்ந்த இடங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில், முட்டம் ஆகிய கடற்கரைப் பகுதிகளிலும் கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது. ஒரே கட்டமாக 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது இவர்களின் திட்டமிடுதலுக்கு ஒரு சாட்சியாக விளங்குகிறது. கும்பாரி’ படத்தை ராயல் என்டர்பிரைசஸ்  சார்பில்  குமாரதாஸ் தயாரித்துள்ளார்.

‘கும்பாரி ‘திரைப்படம் 2024 ஜனவரி 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.. இப்படத்தினை 9V ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.