Tamilசெய்திகள்

காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி வருகிறார்கள்

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி அதிகாலை இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பு மீது போர் பிரகடனத்தை அறிவித்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனை பகுதி மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

மேலும் காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள், உணவு பொருட்கள் வினியோகத்தையும் இஸ்ரேல் நிறுத்தியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி காசா மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இரு தரப்பிலும் இதுவரை சுமார் 4,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி மக்கள் ஆவார்கள். ஹமாஸ் அமைப்பு மீது தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப எல்லையில் 3 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் எந்த நேரத்திலும் காசாவுக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்த தயாராகும் வகையில் இருந்தனர்.

ஆனால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணை கைதிகளை கொல்வோம் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தரைவழி தாக்குதலை உடனே தொடங்காமல் பிணை கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியது. அதன்படி ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற 250 இஸ்ரேல் பிணை கைதிகளை மீட்டு கொண்டு வந்தனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது 18 பிணை கைதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிணை கைதிகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்துகாசாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கான செயல்பாடு திட்டத்தை இஸ்ரேல் ராணுவம் வகுத்தது. இதில் வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பொதுமக்களை உடனே அங்கிருந்து வெளியேறி தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்தது.
காசா நகரின் சுரங்க பாதைக்குள்ளும் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்களுக்குள்ளும் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். எனவே மக்கள் தங்களது பாதுகாப்புக்காகவும், உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தும் ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து விலகி செல்லுங்கள் என்று இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியது. வெளியேறுவதற்கான காலக்கெடுவாக 24 மணி நேரம் அளித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவது உறுதியானது. தரைவழி தாக்குதலுக்கு முன்பு வான்வழி தாக்குதலை அதிதீவிரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வடக்கு காசாவில் உள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற தொடங்கி உள்ளனர். உயிர் பிழைக்க அப்பகுதியில் இருந்து ஓட்டம் பிடிக்க வேண்டும் அல்லது இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் வடக்கு காசா மக்கள் உள்ளனர். உயிருக்கு பயந்து அவர்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள்.

இன்றுடன் இஸ்ரேல் விதித்த கெடு முடிவடைவதால் மக்கள் வேகவேகமாக வெளியேறுகிறார்கள். பாலஸ்தீனியர்கள் தங்கள் பொருட்களை கார்கள், லாரிகள் மற்றும் கழுதை வண்டிகளில் கட்டி செல்கிறார்கள். பலர் தங்கள் வீட்டு கதவுகளை பூட்டி விட்டு சாவிகளை எடுத்துச் சென்றனர். போர் முடிந்து திரும்பி வருவோம் என்று அங்கிருந்து கவலையுடன் வெளியேறி வருகிறார்கள்.

இதுவரை லட்சக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக தெற்கு காசாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். பலர் நடைப் பயணமாக செல்கிறார்கள். இதனால் வடக்கு காசா சாலைகளில் வாகனங்கள், மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் மக்கள் தெற்கு காசா மற்றும் எகிப்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காசாமுனை பகுதியில் மொத்தம் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்து வரும் நிலையில் அதில் பாதி அளவு பேர் இடம் பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே தெற்கு காசாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வடக்கு காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்கு மின்சாரம், உணவு, தண்ணீர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதே பெரும் திண்டாட்டமாக இருக்கும் நிலையில் அங்கிருந்து காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவதற்கான சூழல் மிக குறைவாக உள்ளது. இதனால் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

அதே வேளையில் இஸ்ரேல் விதித்துள்ள காலக்கெடு மிகவும் குறைவான நேரம் என்றும் அந்த காலக்கெடுவுக்குள் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவது சாத்தியமில்லை என்றும் ஐ.நா. சபை கவலை தெரிவித்தது. இதனால் பேரழிவு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு காசாவை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஹமாஸ் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் மக்கள் உயிர் பயத்தில் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் வடக்கு காசா மக்கள் வெளியேற இஸ்ரேல் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

வடக்கு காசா பகுதியில் உள்ள மக்கள் கான்யூனுஸ் நகருக்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. 6 மணி நேரம் குறிப்பிட்ட வழித்தடப்பகுதிகளில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் ஆயுதங்கள் உள்ள பகுதி மற்றும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சோதனையை இஸ்ரேல் தரைவழி படை வீரர்கள் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறும்போது, “ஹமாசின் உள்கட்டமைப்புகளின் அச்சுறுத்தல்களை அகற்ற காசான் பிரதேசத்தில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தியது. பிணை கைதிகளை கண்டுபிடிக்க உதவும் ஆதாரங்களை வீரர்கள் சேகரித்தனர்” என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த சோதனையில் மாயமாகி இருந்த இஸ்ரேலியர்கள் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்டவர்களில் சிலரின் உடல்கள் காசா முனையில் கிடந்தது. அந்த உடல்களை இஸ்ரேல் படையினர் மீட்டுள்ளனர். ஆனால் எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

ஹமாஸ் அமைப்பினர் காசாவில் பல இடங்களில் சுரங்கங்கள் அமைத்து அதில் பதுங்கி உள்ளனர். எனவே அதுபோன்ற இடங்களை கண்டுபிடித்து தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்ததால் இன்னும் சிலமணி நேரங்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் பதட்டம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு, மேற்கு காசா பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி மற்றும் பீரங்கி தாக்குதலை தொடங்கியுள்ளது. மேலும் காசாவில் தாக்குதலுக்கு காரணமாக தொலைத்தொடர்பு இணைய தள சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் கமாண்டர் பெயர் மெராத் அபு மெராட் என்று அறிவித்துள்ளது. இவர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரமான தாக்குதலை இவர்தான் வழிநடத்தினார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான சண்டையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த 27 பேரும், அதற்கு அடுத்தப்படியாக தாய்லாந்தை சேர்ந்த 24 பேரும் உயிரிழந்து உள்ளனர்.