Tamilசெய்திகள்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க திட்டம்! – வைகோ கண்டனம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் கதிரியக்க அபாயம் கொண்ட அணுக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றவும், உரிய முறையில் சேமிக்கவும் இந்திய அணுசக்திக் கழகத்திடம் திட்டங்கள் இல்லை என்பதால் 2013-ம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக் கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தை 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்டு 24-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கூடங்குளம் அணுஉலை குறித்து பாராளுமன்றத்தில் சி.பி.எம். உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறுசுழற்சி மையத்திற்கு எடுத்துப் போகும்வரை அருகில் உள்ள மையத்தில் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் கூடங்குளம் போன்ற அணு உலைகளில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என்பதை அமைச்சர் ஜிதேந்திர சிங் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அணுக்கழிவுகளைச் சேமிக்க ஆழ்நில அணுக்கழிவு மையம் தற்போது தேவைப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது ஆகும்.

கூடங்குளத்தில் அணு உலை வளாகத்தினுள் அணுக்கழிவு மையத்தை அமைத்து, அதில் கூடங்குளம் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்பட்டு வரும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டு வந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய பா.ஜக. அரசு முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஒன்றிய அரசின் இத்தகைய முயற்சிகளை முறியடிப்பதுடன், கூடங்குளத்தில் அணுஉலை 3-வது மற்றும் 4-வது அலகுகள் அமைத்திட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதி யையும் நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அணு உலைக்கழிவுகளை கொண்டு போய் சேமித்து வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.