Tamilசெய்திகள்

கேரளா சட்டசபையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

கேரள மாநில சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தொடரின் முதல் நாளில் முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் கேரள சட்டசபை கூடியது. அப்போது மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பினராயி விஜயன், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மை வீழ்த்தப்படும். உண்மையான பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை பா.ஜ.க. திசை திருப்பி வருகிறது என குற்றம் சாட்டினார்.

கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.