Tamilவிளையாட்டு

இந்திய அணியில் இல்லாதது ஏமாற்றம் – ஹனுமா விஹாரி கவலை

30 வயதான ஹனுமா விஹாரி இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் சமீப காலமாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க விரும்பினார். ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணிக்காக விளையாடி வரும் அவர் ஏழு இன்னிங்சில 365 ரன்கள் அடித்துள்ளார்.

தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் “நான் இந்திய அணியில் இல்லாததை கவலையாகவும், ஏமாற்றமாகவும் உணர்கிறேன். அனைவருக்கும் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். தற்போது என்னுடைய பணி ரஞ்சி தொடரில் ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான். எனக்கும் அணிக்கும் இந்த சீசன் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய லட்சியம் அதிக ரன்கள் குவித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான்” என்றார்.

ஹனுமா விஹாரி 2018-ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடினார். அதில் முறையே 22 மற்றும் 11 ரன்கள் அடித்தார்.

இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 839 ரன்கள் அடித்துள்ளார்.