Tamilசெய்திகள்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா – கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துக்கொண்டு பட்டங்கள் வழங்கினார்

கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 30-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 785 மாணவிகள் மருத்துவம், அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று கவர்னர் ரவியிடம் அதற்கான சான்றுகளை பெற்றனர்.

மேலும் 15375 மாணவிகள் பட்டம் பெற விழாவிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த தலைவர்கள் பட்டங்களை வழங்க உள்ளனர். இதுதவிர 40 மாணவிகள் பதக்கங்கள் பெற்றனர். மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய கவர்னர் ரவி இந்தியாவில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். சமீபத்தில் நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பிய விஞ்ஞானிகள் குழுவிலும் பெண்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதுபோன்ற சாதனையாளர்களாக மாணவிகள் எதிர்காலத்தில் உருவாகவேண்டும் என்று பேசினார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, டெல்லி அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி மன்ற தலைமை இயக்குனர் கலைச்செல்வி, பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கலா, பதிவாளர் ஷீலா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கவர்னர் ரவி கொடைக்கானல் வருகையை முன்னிட்டு மலைச்சாலை மற்றும் அவர் தங்கும் இடம், பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் கவர்னர் ரவி மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.