Tamilசெய்திகள்

கொப்பரை கொள்முதலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்

சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 4.58 லட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. கொப்பரையின் சந்தை விலை குறைந்த பட்ச ஆதரவு விலையை விடக் குறையும்போது தென்னை விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாட்டில் மத்திய அரசின் விலை ஆதரவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி அரவைக் கொப்பரை கிலோ ரூ.108.60 என்ற வீதத்திலும், பந்துக் கொப்பரை கிலோ ரூ.117.50 என்ற வீதத்திலும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையத்திற்காக (என்.ஏ.எப்.இ.டி.) குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் 1.4.2023 முதல் 30.9.2023 வரையிலான காலகட்டத்தில் 37,638 விவசாயிகளிடமிருந்து ரூ.597.225 கோடி மதிப்பிலான 54,993 மெ. டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதலுக்கான கால அளவினை நீட்டிக்க வேண்டி தொடர் கோரிக்கை வரப்பெற்றதைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமரை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கொப்பரை கொள்முதலுக்கான இலக்கு 56 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து 90ஆயிரம் மெட்ரிக் டன்னாக (அதாவது கூடுதலாக 34,000 மெ.டன்) உயர்த்தப்பட்டதுடன் கொள்முதல் செய்யும் கால அளவும் 26.11.2023 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அரசாணையும் 06.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள தென்னை அதிகம் சாகுபடி செய்யப்படும் 24 மாவட்டங்களில் உள்ள 75 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது கொப்பரைத் தேங்காயை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.