Tamilசெய்திகள்

சபாநாயகர் தனக்கான மரபை கடைபிடிக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து பலமுறை கடிதம் கொடுத்தும், தெளிவுபடுத்தியும் தீர்வு காணவில்லை. சபாநாயகர் தனக்கான மரபை கடைபிடிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் நகலை சபாநாயகரிடம் கொடுத்தும் ஏற்கவில்லை. புனிதமான இருக்கையில் உள்ள அவர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் தருவதற்கு முன்பே சபாநாயகரே பதில் சொல்கிறார். அமைச்சர்கள் பதில் அளிப்பது இல்லை.

சட்டசபையில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை. சபாநாயகர் தனது மரபை மீறி செயல்படுகிறார். சட்டமன்ற பேரவை மரபின்படி ஒவ்வொரு கட்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் இருப்பது மரபு. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக 10 முறை சட்டப் பேரவை தலைவருக்கு கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை.

உயர்நீதிமன்ற உத்தரவு, தேர்தல் ஆணைய அங்கீகாரம் உள்ளிட்ட ஆதாரங்கள், ஆவணங்களை அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த காலங்களில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையின் அருகிலேயே துணைத் தலைவர் இருக்கை இருப்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்தது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு நகலும் அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.