Tamilசெய்திகள்

சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்ற குஜராத் தம்பதி! – ஈரானில் பாகிஸ்தான் ஏஜெண்டிடம் சிக்கி தவிப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத் நரோடா பகுதியில் வசித்து வரும் இளம்ஜோடி பங்கஜ் பட்டேல்- நிஷா பட்டேல். 29 வயதாகும் இவர்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றனர். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஏஜென்ட் ஒருவரை அணுகியுள்ளனர்.

அவர் அந்த ஜோடியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஈரான் வழியாக அமெரிக்கா செல்ல உதவி புரிவதாகவும், முதலில் ஈரானுக்கு செல்லுங்கள். அங்கு சென்ற பின் தங்களை தொடர்பு கொண்டு, அமெரிக்கா செல்வதற்கான வழிமுறையை தெரிவிக்கிறேன் எனக்கூறி ஈரான் வரையிலான டிக்கெட்டை கொடுத்துள்ளார். இதை நம்பி அந்த ஜோடி தெஹ்ரான் விமான நிலையம் சென்றடைந்தது. இரண்டு நாட்களுக்கு மேலாக அங்கு இருந்தபோதிலும் ஏஜென்டிடம் இருந்து தகவல் ஏதும் வரவில்லை.

இதற்கிடையே பாகிஸ்தானை நாட்டை சேர்ந்த ஏஜென்ட் பணத்திற்காக அவர்களை பிணையாக பிடித்து வைத்துள்ளதாக நரோடாவில் உள்ள கிருஷ்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவிற்கு வெளியில் நடைபெற்றுள்ளதால் குற்றப்பிரிவு போலீசார் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அனைத்து தகவல்களையும் பெற்று, அந்த ஜோடியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப்பிரிவு துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஏஜென்ட், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற வீடியோ உறவினருக்கு அனுப்பி, அவர்களை ரிலீஸ் செய்ய பணம் அனுப்பும்படி மிரட்டியுள்ளனர்.