Tamilசெய்திகள்

சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தது – இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். அதன்பின் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.