Tamilசெய்திகள்

சபாநாயகராக பதவி ஏற்றுக்கொண்டார் அப்பாவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிதாக அமைந்துள்ள தி.மு.க. அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கிடையே தமிழக சட்டசபைக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்து இருந்தார்.

இதையொட்டி சபாநாயகர் பதவிக்கு தி.மு.க. சார்பில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவு எம்.எல்.ஏ. நேற்று காலை சட்டசபை செயலாளர் சீனி வாசனிடம் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். அமைச்சர் துரைமுருகன் வழிமொழிந்தார். அப்போது அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

இதே போல் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டி மனுதாக்கல் செய்தார்.

சபாநாயகர் பதவிக்கும், துணை சபாநாயகர் பதவிக்கும் இவர்களை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். அப்போது சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார். அவரை சபாநாயகர் இருக்கைக்கு வந்து அமரும்படி அழைப்பு விடுத்தார். சபாநாயகர் இருக்கையில் இருந்து கு.பிச்சாண்டி இறங்கினார்.

இதைத் தொடர்ந்து அப்பாவுவை சபை உறுப்பினர்கள் வரவேற்று மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் எழுந்து அப்பாவுவின் கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர்.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அனைவரையும் வணங்கி சபை நிகழ்ச்சியை நடத்தினார்.

இதையடுத்து துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி பதவியேற்றார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர்கள், சபை உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

இறுதியாக சபாநாயகர் அப்பாவு ஏற்புரை நிகழ்த்தி பேசினார்.

தமிழக சட்டசபையில் சபாநாயகராக பதவி ஏற்றுள்ள அப்பாவு சட்டசபையின் 18-வது சபாநாயகர் ஆவார்.

சட்டசபையில் இதற்கு முன்பு சபாநாயகராக சிவசண்முகம் பிள்ளை, கோபாலமேனன், கிருஷ்ண ராவ், செல்லப்பாண்டியன், சி.பா.ஆதித்தனார், கோவிந்தன், மதியழகன், முனுஆதி, ராஜாராம், பி.எச்.பாண்டியன், தமிழ்க்குடிமகன், சேடப்பட்டி முத்தையா, பி.டி.ஆர்.பழனி வேல்ராஜன், காளிமுத்து, ஆவுடையப்பன், டி.ஜெயக்குமார், தனபால் ஆகியோர் சபாநாயகராக பதவி வகித்துள்ளனர்.

இதில் கோவிந்தன், தனபால் ஆகியோர் இருமுறை சபாநாயகர்களாக இருந்துள்ளனர்.

இப்போது 18-வது சபாநாயகராக பதவி ஏற்றுள்ள அப்பாவு 1996-ம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக சிறப்பாக பணியாற்றியவர். 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர்.

2006-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 2011-ம் ஆண்டு இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. 2016-ம் ஆண்டு தேர்தலில் இதே ‘ராதாபுரம்’ தொகுதியில் அப்பாவு மீண்டும் போட்டியிட்டபோது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி அவர் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

அந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் கோர்ட்டில் மீண்டும் எண்ணப்பட்டது. ஆனால் இதுவரை தீர்ப்பு வரவில்லை.

இந்த நிலையில் தற்போது நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்று சட்டசபை சபாநாயகர் ஆகி உள்ளார்.

தமிழக சட்டசபைக்கு கடந்த முறை அவர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அதே சட்டபேரவைக்கு இப்போது அவர் தலைவராகி உள்ளார்.