Tamilசெய்திகள்

சீனா – மாலத்தீவு இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், சீனாவுக்கு 5 நாள் பயணமாக சென்று உள்ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சீனா-மாலத்தீவு இடையே சுற்றுலா, பேரிடர் மேலாண்மை, கடல்சார் பொருளாதாரம், வர்த்தக வழித்தடம் உள்பட பல்வேறு துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மாலத்தீவு அரசுக்கும், சீன அரசுக்கும் இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இப்போது இரு நாட்டு அதிபர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று தெரிவித்துள்ளது.

மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார். அவர் பதவி ஏற்றதும் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு சென்றதை மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் விமர்சனம் செய்தனர். இதையடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு உத்தரவிட்டது.

இவ்விவகாரத்தால் இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு சென்று அந்த நாட்டுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் மாலத்தீவுக்கு சீனாவில் இருந்து சுற்றுலாவாக அதிகம் பேர் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ள மாலத்தீவு, சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மாலத்தீவு சுற்றுலா செல்வதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். தற்போது பிரதமர் மோடியை விமர்சித்ததால் மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் பலர் ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.