Tamilசெய்திகள்

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை தள்ளி வைப்பு

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-

அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இருந்தாலும், கைது செய்யப்படும் நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைத்திருக்க முடியாது. கைது செய்யப்படும் நபரை அமலாக்கத்துறை காவலில் எடுக்க வேண்டும் என்றால் அதன் அதிகாரிகளை காவல் அதிகாரிகளுக்கு இணையாக கருதவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். அவ்வாறு தீர்ப்பளிக்கும்பட்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்ட அதிகாரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு கிடைத்துவிடும்.

சுங்க சட்டத்தின்படி கைது செயய்ப்படும் நபரை சுங்க அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிப்பதில்லை என்றும், போலீசார்தான் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை. எனவே, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க எதுவும் அமலாக்கத்துறைக்கு தடையாக இல்லை.

தமிழ்நாடு காவல் நிலையாணை விதிகளின்படி, கைது செய்யப்படும் நபர் நீதிமன்ற காவலுக்கு முன் அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்கவேண்டும். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும், சட்டரீதியான வாதங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.