Tamilசெய்திகள்

சென்னை கோயம்பேடு பழக்கடைகள் மீண்டும் திறப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ‘ஹாட் ஸ்பாட்டாக’ மாறியதையடுத்து, கடந்த மே மாதம் 5-ந் தேதி மார்க்கெட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இயங்கி வந்த மொத்த பழக்கடைகள் மாதவரம் பஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. மொத்த காய்கறி மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதே போன்று, பூ மார்க்கெட் வானகரத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக மொத்த காய்கறி கடைகள் கடந்த செப்டம்பர் 28-ந் தேதி முதல் மீண்டும் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. எனினும், மொத்த பழக்கடைகள் மற்றும் பூக்கடைகள் மட்டும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

இதற்கிடையே பழ வியாபாரிகளின் அழுத்தத்தினாலும், ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையிலும் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் மாதவரத்தில் இயங்கி வந்த மொத்த பழக்கடைகள் கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கோயம்பேடு பழ மார்க்கெட்டை திறப்பதற்கான நடவடிக்கைகளை பழக்கடை வியாபாரிகளும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (சி.எம்.டி.ஏ.) மேற்கொண்டன. அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த பழக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் ராட்சத எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், துப்புரவு மற்றும் சீரமைப்பு பணிகளும் துரிதமாக நடைபெற்றன.

இதுகுறித்து சென்னை பழக்கமிஷன் ஏஜென்சி சங்கத்தலைவர் சீனிவாசன் கூறுகையில், ‘பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 2-ந் தேதி (இன்று) மொத்த பழக்கடைகள் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சுமார் 6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறோம். அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி முககவசம் அணிந்து, கிருமி நாசினிகள் பயன்படுத்தி கொரோனா நோய் பரவாத வண்ணம் பார்த்துக்கொள்வோம்’ என்று கூறினார்.

பழக்கடைகள் இன்று திறக்கப்படுவதையொட்டி, நேற்று இரவு 9 மணி முதல் கோயம்பேடு சந்தைக்கு பழங்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன. அவை இன்று சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பெரியார் காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.ராஜசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொரோனாவால் உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.