Tamilசெய்திகள்

சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பிரதமர் நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார். நாளை மதியம் 3 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையாறு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று சென்னை-கோவை இடையேயான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் சென்னை – கோவைக்கு இருமார்க்கத்திலும் வந்தே பாரத் ரெயில் சேவை முன்பதிவு தொடங்கி உள்ளது. 6 மணி நேர பயணத்திற்கு ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினசரி இந்த ரெயில் காலை 6 மணிக்கு கோவையில் புறப்பட்டு, 11.50 மணிக்கு சென்னையை வந்தடையும்.

அதேபோல, தினசரி மதியம் 2.25-க்கு சென்னையில் புறப்பட்டு இரவு 8.15-க்கு கோவையை சென்றடையும். உணவுடன் சேர்த்து, குளிர்சாதன சேர் கார் கட்டணம் ரூ.1215, எக்ஸ்கியூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2310 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவு வேண்டாம் என்பவர்களுக்கு, முறையே ரூ.1057 மற்றும் ரூ.2116 வசூல் செய்யப்படும்.