Tamilசெய்திகள்

ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல் 1.65 லட்சம் கோடியாக உயர்வு – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜூலை மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, மொத்தமாக ரூ.1,65,105 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது.

அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.29,773 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,623 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.85,930 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. செஸ் வரியாக ரூ.11,779 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.