Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி – நெல்லையை வீழ்த்தி கோவை சாம்பியன் பட்டம் வென்றது

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நெல்லையில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் 57 ரன்களில் அவுட் ஆனார். முகேஷுடன் இணைந்த அதீக் ரஹ்மானும் அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர். அதீக் ரஹ்மான் 50 ரன்னில் அவுட்டானார். முகேஷ் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

நெல்லை சார்பில் சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. கோவை அணியின் துல்லிய பந்துவீச்சில் நெல்லை அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது.

இறுதியில், நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. கோவை கிங்ஸ் சார்பில் ஜத்வேத் சுப்ரமணியம் 4 விக்கெட்டும், ஷாருக் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.