Tamilசெய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

தலைநகரான டெல்லியில் கொரோனா நோய் குறைந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போது தினமும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை புதிதாக பாதிக்கப்படுகிறார்கள். சராசரியாக 90 பேர் உயிரிழக்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக 104 பேர் உயிரிழந்தனர். எனவே 2-வது தடவையாக கொரோனா உச்சத்தை நோக்கி பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார்.

இதில் மாநில கவர்னர் அனில் பைஜால், முதல் மந்திரி- நிதிஷ்குமார், மத்திய சுகாதார மந்திரி ஹர்‌ஷவர்தன் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது தினமும் 60 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அது 1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் வீடு, வீடாக மருத்துவ குழுவினர் சென்று கொரோனா அறிகுறிகளுடன் யாரேனும் இருக்கிறார்களா? என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நோயை கட்டுக்குள் கொண்டு வர 12 அம்ச திட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

அதன்படி கொரோனா பரிசோதனை 2 மடங்காக உயர்த்தப்படுகிறது. அனைத்து சோதனை கருவிகள் கொண்ட நடமாடும் வேன்கள் மூலமாக எல்லா பகுதிகளுக்கும் சென்று சோதனை நடத்துவது, டெல்லி ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கையை மேலும் 750 உயர்த்துவது.

சத்தர்பூரில் உள்ள கொரோனா ஆஸ்பத்திரியில் அதிக ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்குவது, மேலும் சில ஆஸ்பத்திரிகளை தயார் நிலையில் வைப்பது, தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த வசதிகளை மேம்படுத்த மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொள்வது.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் மாற்று வழிமுறைகளை கையாள்வது, தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவ படை டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோரை டெல்லியில் கொரோனா சிகிச்சைக்கு அழைப்பது, அவர்களை அழைத்து வர விமானங்களை தயார் நிலையில் வைத்திருப்பது.

உயிரிழப்புகளை தடுக்க அதிக பாதிப்புள்ள நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவது, உடனடி உயர் சிகிச்சை அளிக்க வசதி செய்வது, சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்குவது போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.