Tamilசெய்திகள்

டெல்லியில் போதைப்பொருள் கைக்கப்பற்றப்பட்ட வழக்கு – சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு சீல்

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடோன் ஒன்றில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் குடோன் அது என்பது தெரிய வந்தது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் பிடிபட்டது. மெத்தாம் பெட்டமைன் போதைப் பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சூடோ பெட்ரின் போதைப்பொருளை கடத்தி குடோனில் பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரகுமான் விழுப்புரத்தை சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. டெல்லி குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. இந்த போதைப் பொருட்களை கடத்துவற்கு ஜாபர் சாதிக்குக்கு முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு இவர்கள் உணவுப் பொருட்கள் என்று கூறி போதைப் பொருட்களை அனுப்பி வைத்திருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 3ஆண்டுகளில் ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி அனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போலீசார் சம்மனை ஒட்டினார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் தனது சகோதாரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோருடன் சாந்தோமில் 3 அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டில்தான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மனை ஒட்டி இருந்தனர்.

அதில் கடந்த 26-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜாபர் சாதிக் ஆஜராகவில்லை. இந்த நிலையில் சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை பூட்டிவிட்டு ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கும் நிலையில் பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்தனர்.

பின்னர் அங்கு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள். நேற்று பகல் 12 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்துள்ளது. இந்த சோதனையின்போது போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோதனை முடிந்து வீட்டைவிட்டு வெளியேறிய அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவரை கைது செய்வதற்காக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கின் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தி அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் செல்போன் எண்ணை வைத்தும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.