Tamilசெய்திகள்

தங்கம் விலை ஏற்றம் – ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது

உக்ரைன் – ரஷியா போரால் கடந்த 24-ந்தேதி தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது.

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 608 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மறுநாள் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்து 472 ஆகவும் அதற்கு அடுத்தநாள் (சனிக்கிழமை) ரூ.37 ஆயிரத்து 904 ஆகவும் குறைந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4,813 ஆக விற்பனையாகிறது.

ஒரு பவுன் ரூ.37,904-ல் இருந்து ரூ.38,504 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது.

இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69-ல் இருந்து ரூ.70.10 ஆகவும், ஒரு கிலோ ரூ.69 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரத்து 100 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.