Tamilசெய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கன மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்து பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. கடந்த வாரம் மிச்சாங் புயல் உருவாகி சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை வெள்ளக்காடானது. மிச்சாங் புயல் ஆந்திராவில் கடந்து சென்றதை தொடர்ந்து தமிழகத்தில் ஒரு வாரமாக மழை குறைந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (16-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும்.

11 செ.மீ. முதல் 20 செ.மீ. மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல 17-ந்தேதி தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் மீண்டும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.