Tamilசெய்திகள்

தமிழக அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது நீண்ட நாட்களாக ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்.

இதுபோன்று பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்கள் ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். பஞ்சாப் மாநிலம் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தது. பின்னர் தமிழக அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது. பஞசாப் மாநிலம் தொடர்ந்த வழக்கில் ஆளுநர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

வருகிற சனிக்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை தலைமை செயலகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு திருப்பி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்:-

1. சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
2. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா
3. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
4. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
5. தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா
6. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
7. தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
8. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
9. அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
10. அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா