Tamilசெய்திகள்

தற்காலிக இ-மெயில்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தும் தீவிரவாதிகள்

நாடு முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் உளவுத்துறையினர் மற்றும புலனாய்வு பிரிவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பயங்கரவாதிகள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தும் தகவல் தொடர்புகளை கண்டறிந்து அவர்களின் சதி திட்டத்தை முறியடிப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சமீப காலமாக நாட்டின் வட இந்திய மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களில் குறிப்பிட்ட சில சம்பவங்களை ஆய்வு செய்த போது பயங்கரவாதிகள் தங்களின் தகவல் தொடர்புக்கு புதிய கருவியாக டிஸ்போசபிள் இமெயில் எனப்படும் தற்காலிக இமெயில்களை பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த இமெயில்களை குறுகிய காலத்திற்கு மட்டும் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி ஆகும். பதிவுகள் இல்லாமல் இருக்கும் இவற்றை பயன் படுத்துவோரின் தொடர்பு விவரங்கள் எதுவும் தேவையில்லை. இந்த மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துபவர் பற்றிய விவரங்கள் சரிபார்க்கப்படுவது கிடையாது. இதன் மூலம் புதிய மின்னஞ்சல் முகவரியை பெறவும், சில நொடிகளில் மின்னஞ்சலை பெறவும் முடியும். ஸ்பேம், விளம்பரங்கள் தொடர்பாக மெயில்களில் இருந்து பயனாளர்களை பாதுகாப்பதற்காக இது போன்ற தற்காலிக மின்னஞ்சல்கள் உருவாக்கப்பட்டன.

சமூக ஊடக நெட்வொர்க்குகளில் சுயவிபரங்களை உருவாக்கவும், கோப்புகளை பதிவிறக்கவும் மற்றும் பயனர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க விரும்பும் ஒவ்வொரு முறையும் அதைப் பயன்படுத்தவும் தற்காலிக மின்னஞ்சல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மின்னஞ்சல்கள் வரையறுக்கப்பட்ட ஆயுட் காலம் கொண்டவை. இவை சிறிது நேரத்தில் தானாகவே அழிந்து விடும். இவற்றை த்ரோவே இமெயில், 10 நிமிட மெயில், டெம்மெயில், டிராஸ் மெயில், பேக் மெயில் என்றும் குறிப்படுகின்றனர். இவற்றை சட்டவிரோத பயன்பாடுகளுக்காக அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன.

சில தளங்கள் சீரற்ற மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்கும் போது சில பயனரின் விருப்பத்திற்கு ஏற்பட தனிப்பயனாக்கப்பட்ட ஐடிகளை உருவாக்குகின்றன. இதுபோன்ற மெயில்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தீவிரம் காட்டி உள்ளன.