Tamilவிளையாட்டு

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வலுவான நிலைக்குத் திரும்புவோம் – பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது.பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா சிறப்பாக பந்து வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து பாகிஸ்தான் அணியின் 3 விக்கெட்களை சாய்த்தார்.

மற்றொரு வீரர் பிராட் எவன்ஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 2வது போட்டியிலும் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளதாவது:

பேட்டிங் போது நாங்கள் முதல் ஆறு ஓவர்கள் மிக மோசமான நிலையில் இருந்தோம், ஆனால் ஷதாப் மற்றும் ஷான் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷதாப் அவுட்டானார்.

பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் மற்ற வீரர்களுக்கு பேட்டிங்கில் அழுத்தம் ஏற்பட்டது. பவுலிங் போது முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் புதிய பந்தை நன்றாகப் பயன்படுத்தவில்லை. பின்னர் நன்றாக செயல்பட்டோம். நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் வலுவான நிலைக்குத் திரும்புவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.