Tamilசெய்திகள்

தினமும் 7 மணி நேரம் பாத யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி – முக்கிய இடங்களில் மக்களுடன் கலந்துரையாடுகிறார்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும் ராகுல் காந்தி 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் சென்றடைகிறார். கன்னியாகுமரியில் 7-ந்தேதி தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக 7-ந் தேதி காலை சென்னை வருகிறார்.

காலை 11 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ராகுல் காந்தி மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார். அவருடன் 2 மாநில முதல்-அமைச்சர்களும் வருகிறார்கள். கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அங்கிருந்து விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை தனிப்படகில் சென்று ராகுல் காந்தி பார்வையிடுகிறார். பின்னர் காந்தி மண்டபத்தை ராகுல் காந்தி பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் பாதயாத்திரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் காமராஜர் மண்டபத்திற்கு செல்லும் ராகுல் காந்தி அந்த பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது. இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரை ஆற்றுகிறார். இதை தொடர்ந்து அங்கிருந்து தனது பாத யாத்திரையை தொடங்குகிறார்.

முதல் நாள் 3½ கிலோ மீட்டர் தூரம் அவர் பாத யாத்திரையை மேற்கொள்கிறார். ராகுல் காந்தியுடன் டெல்லியில் இருந்து 100 நிர்வாகிகளும் தமிழகத்தில் இருந்து 300 நிர்வாகிகளும் என 400 பேர் பாதயாத்திரை செல்ல உள்ளனர். இவர்கள் தினமும் ராகுல் காந்தி பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கு கொள்வார்கள். இது தவிர அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

பாத யாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் பாத யாத்திரையை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ராகுல் காந்தி நிறைவு செய்கிறார். அன்று இரவு அங்கு தங்குகிறார். தினமும் காலை 4 மணி நேரமும், மாலை 3 மணி நேரமும் என 7 மணி நேரம் பாத யாத்திரை செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார்.

8-ந்தேதி காலை 7 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து தனது பாத யாத்திரையை தொடங்குகிறார். வடுகன் பற்று, கொட்டாரம், பொற்றையடி, வழுக்கம்பாறை வழியாக சுசீந்திரம் பகுதியில் மதியம் 11 மணிக்கு தனது பாத யாத்திரையை நிறைவு செய்கிறார். மாலை 4 மணிக்கு சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு கோட்டார், சவேரியார் ஆலய சந்திப்பு, செட்டிகுளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக இரவு 7 மணிக்கு டெரிக் சந்திப்பில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார்.

இரவு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ராகுல் காந்தி தங்குகிறார். மறுநாள் 9-ந்தேதி காலை 7 மணிக்கு ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து புறப்பட்டு பார்வதிபுரம். சுங்கான் கடை, வில்லுக்குறி வழியாக புலியூர்குறிச்சியில் மதியம் 11 மணிக்கு பாதயாத்திரை நிறைவு செய்யும் அவர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தக்கலை, மேட்டுக்கடை, மணலி சந்திப்பு, அழகிய மண்டபம் வழியாக முளகுமூட்டில் இரவு 7 மணிக்கு பாத யாத்திரையை நிறைவு செய்கிறார்.

9-ந்தேதி காலை 7 மணிக்கு முளகுமூடு பகுதியில் இருந்து பாத யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி சாமியார் மடம், இரவிபுதூர் கடை வழியாக சிராயன்குழி செல்கிறார். அங்கு காங்கிரஸ் கொடி கம்பத்தில் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் சாங்கை வழியாக மார்த்தாண்டம் செல்கிறார். அங்கு மதியம் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் மாலை 4 மணிக்கு குழித்துறை, படந்தாலுமூடு, களியக்காவிளை, கோழிவிளை வழியாக செறுவாரகோணம் செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார்.

10-ந்தேதி காலை செறுவாரகோணத்தில் இருந்து புறப்பட்டு கேரளா மாநிலம் செல்கிறார். ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் நேரங்களில் மக்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இளைஞர் காங்கிரசார், மாணவர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கு ஏற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் பலரும் இந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுகிறது.