Tamilசெய்திகள்

திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் – அண்ணாமலை அறிவிப்பு

தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க.வினரின் சொத்து பட்டியல்களை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளதாகவும், 10 ஆயிரத்து 841 கோடி ரூபாய் மதிப்பிலான 21 நிறுவனங்கள் தனக்கு சொந்தமானவை என அண்ணாமலை கூறியது தவறானது என்றும் அவதூறானது என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட்டு அண்ணாமலை இன்று ஆஜராக உததரவிட்டிருந்தது. இதன்படி அவர் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தி.மு.க. பைல்ஸ் ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டதில் இருந்தே தி.மு.க.வினர் கோபத்தில் உள்ளனர். டி.ஆர்.பாலு முன்னதாகவே நீதிமன்றத்தில் வந்து சத்திய பிரமாணம் செய்து விட்டு சென்று இருக்கிறார். 3 நிறுவனத்தில் மட்டும்தான் பங்குதாரராக இருக்கிறேன் என்று டி.ஆர்.பாலு கூறி உள்ளார்.

பா.ஜ.க. வழக்கறிஞர்கள் அணி பலமாக இருப்பதை இன்று தான் பார்த்தேன். மீண்டும் ஆகஸ்டு மாதம் 3-வது வாரம் ஆஜராக சொல்லி இருக்கிறார்கள். தி.மு.க. ஊழல் பட்டியல் சம்பந்தமான பாகம்-2 தயாராக உள்ளது. கவர்னர், டி.ஜி.பி. ஆகியோரிடம் கொடுப்பதா? அல்லது பொது வெளியில் வெளியிடுவதா? என்பது பற்றி பின்னர் அறிவிப்பேன்.

பினாமி பெயரில் வாங்கி இருக்க கூடிய சொத்து பட்டியல்கள் இருக்கிறது. அவர்கள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். ஊழல் பட்டியல் பாகம்-2 பாதயாத்திரைக்கு முன்பு ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்படும்.

நான் வெளியிட இருக்கிற பினாமிகள் அனைவரும் தி.மு.க.வினருக்கு சொந்தமானவர்கள் தான். ரத்த சொந்தமும் இருக்கிறது. இது சம்பந்தமான புகைப்படங்களும் உள்ளன.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.