Tamilசெய்திகள்

திருவண்ணாமலையும் தீபமும் போலதான், திருவண்ணாமலையும் தி.மு.க.வும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலையில் திமுக பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அந்த உரையில் அவர் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றக் களம் நமக்காக காத்திருக்கிறது. வெற்றிக் கனியைப் பறிக்க, அந்தத் தேர்தல் பணிக்கான தொடக்கப்புள்ளியான வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மத்திய மண்டல மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சியிலும் – தென் மண்டல மாவட்டங்களுக்கான கூட்டம் ராமநாதபுரத்திலும்- மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான கூட்டம் திருப்பூரிலும் நடந்தது. இப்போது உங்களுடைய முகங்களை பார்ப்பதற்காகவே இந்த வடக்கு மண்டல மாநாட்டிற்கு கழகத்தின் கோட்டையாக விளங்கும் திருவண்ணாமலைக்கு நான் வந்திருக்கிறேன்.

ஒளி மிகுந்த ஊரில் உங்கள் முகங்களில் எல்லாம் உதயசூரியனின் ஒளியை பார்க்கிறேன். தினமும் காலையில் சூரிய ஒளியை பார்க்கும்போது என்ன மாதிரியான உற்சாகம் ஏற்படுமோ, அதே மாதிரியான உற்சாகம்தான் உங்களை பார்க்கும்போதும் ஏற்படுகிறது! உற்சாகம் என்று சொல்வதைவிடப் புதியதொரு உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகிறது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! ஒரு நாள் முழுவதும், ஒரு வாரம் முழுவதும் – ஓய்வில்லாமல் உழைத்தாலும், அடுத்த நாள் கழக உடன்பிறப்புகளின் இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டாலே புதிதாக ஒரு எனர்ஜி வந்துவிடும். ஏன் என்றால், நீங்கள்தான் “சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!” இந்தப் பாசப்பிணைப்பை ‘உடன்பிறப்பே…’ என்ற ஒரே ஒரு சொல் மூலமாக உருவாக்கிக் கொடுத்தவர் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

திருவண்ணாமலையும் தீபமும் போலதான், திருவண்ணாமலையும் தி.மு.க.வும்! யாராலும் பிரிக்க முடியாது! பல்வேறு வரலாற்றை நம்மடைய பொதுச் செயலாளர் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்று, இரண்டை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நம்முடைய கழகம் உருவான அன்று நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் 1,451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாய் இதே திருவண்ணாமலையை சேர்ந்த நம்முடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ப.உ.சண்முகம் அவர்கள் வழங்கியது. 1957 தேர்தலில் நாம் முதன்முதலாக போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றோம். அதில், 3 பேர் இந்த மாவட்டத்துக்காரர்கள்! முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றார்கள்.

அதில் ஒன்று, இந்த திருவண்ணாமலை தொகுதி! சட்டமன்றத்துக்கு, ப.உ.சண்முகம், பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை! நாடாளுமன்றத்திற்கு, இரா.தர்மலிங்கம்! இன்றைக்கும் இவர்கள் பெயரை வரலாறு சொல்லிக் கொண்டு இருக்கிறது! அப்படிப்பட்ட நம்முடைய ப.உ.ச. அவர்களுக்கும் இரா.தர்மலிங்கம் அவர்களுக்கும் கொஞ்சம் நாட்களுக்கு முன்புதான் நம்முடைய வேலு அவர்களின் சீரிய முயற்சியில் மாவட்டக் கழகம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது! அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொன்னதுபோல, 1963-இல் தி.மு.க.விற்கு திருப்புமுனை தந்தது திருவண்ணாமலை இடைத்தேர்தல்! அப்போது ஆளுங்கட்சி, காங்கிரஸ்! நம்முடைய வேட்பாளர், ப.உ.ச. அவர்கள்! தேர்தல் பொறுப்பாளர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! அன்றைக்கு திருவண்ணாமலை கொடுத்த வெற்றிதான், 1967-இல் நாம் ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது!

அதேபோல், 2021 தேர்தலின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது, வரவேற்புரை ஆற்றுகிறபோது வேலு அவர்கள் பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பயணத்தையும் இதே திருவண்ணாமலையில் இருந்துதான் நான் தொடங்கினேன். தொகுதி தொகுதியாகச் சென்று கோரிக்கை மனுக்களை வாங்கினேன். “உங்கள் கவலைகளை, கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்” என்று சொன்னேன். ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு, இலட்சக்கணக்கான மக்கள் மனு கொடுத்தார்கள். அந்த அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் வெள்ளம்போல் மக்கள் திரண்டார்கள். அன்றைக்கு வெற்றித் தீபத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெறுவதற்கு அடித்தளம் அமைத்தது, திருவண்ணாமலை தான் என்பதை பெருமையோடு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

இந்த பாக முகவர்களின் வடக்கு மண்டல மாநாட்டை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அருணாசலம் நகரில் இருக்கும் கலைஞர் பெயரால் அமைந்த திடலில் நடத்திக் காட்டியிருக்கும் நம்முடைய மதிப்பிற்குரிய எ.வ.வேலு அவர்களுக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். “எதையும், யாரும் ஏவாமலேயே செய்யக் கூடியவர் வேலு” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பாராட்டினார்.

திருவாரூரில் கலைஞர் கோட்டம் – மதுரையில் கலைஞர் நூலகம் – சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை – இதெல்லாம் எவ்வாறு அமைய வேண்டும் என்று நான் விரும்பினேனோ, அதே மாதிரி, அழகோடும் கம்பீரத்தோடும் அமைத்தவர்தான் நம்முடைய அன்புக்குரிய வேலு அவர்கள்! கழகத்தின் ‘விழா வேந்தன்’ என்றால் அது, வேலுதான் என்று திருவண்ணாமலை கலைஞர் சிலை திறப்பு விழாவில் நான் சொன்னேன். அப்படிப்பட்ட அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றும் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தின் சார்பிலும் – என்னுடைய முறையிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.