Tamilசெய்திகள்

தென் மாவட்டங்களை குறி வைத்து செயல்படும் எடப்பாடி பழனிசாமி

பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று தனது பலத்தை காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார். தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு குறைந்திருக்கும் நிலையில் அதனை மீட்டெடுக்க எடப்பாடி பழனிசாமி கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இதன் காரணமாகவே அவர் கடந்த சில மாதங்களாகவே தென் மாவட்டங்களை குறி வைத்து மாநாடு பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறார். மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு செல்வாக்கான இடங்கள் என்பதை பொய்யாக்கி காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டை எடப்பாடி பழனிசாமி நடத்திக் காட்டினார்.

அதன்பிறகு சங்கரன்கோவிலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றபோது அ.தி.மு.க.வினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். தென் மாவட்ட மக்களின் வாக்குகளை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னுக்கு சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் கடந்த தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

இதனை மனதில் வைத்து இந்த 58 தொகுதிகளுக்கு உட்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் இந்த முறை எப்படியும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்து விட வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் நோக்கமாக உள்ளது ஏனென்றால் அ.தி.மு.க.வுக்கு ஆரம்பகட்ட வெற்றி கிடைத்ததே தென் மாவட்டங்களில் தான் 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில் கட்சி தொடங்கிய நேரத்தில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது அதன்பிறகு 1977, 1980, 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் தென் மாவட்ட மக்கள் அ.தி.மு.க.வை வெகுவாக ஆதரித்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு தான் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிரடியாக சரிந்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதி என்பது எப்போதுமே அ.தி.மு.க. வின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. கடந்த தேர்தலில் அந்த தொகுதி யையும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க. பறிகொடுத்தது. கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அங்கு தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இப்படி அ.தி.மு.க. செல்வாக்காக இருந்த பல தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. இதுபோன்ற தொகுதிகள் என்னென்ன என்பதை எல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் களமாட வேண்டும் என்று தென் மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.

தமிழக பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் பாரதிய ஜனதா கட்சி பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க. கூட்ட ணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். வலுவான கட்சிகள் இதுவரை கூட்டணியில் சேராத நிலையில் அந்த கட்சிகளின் முடிவுக்காகவும் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்காகவும் எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். நிச்சயம் தி.மு.க. கூட்டணியில் இருந்து பெரிய கட்சிகள் விலகி தங்கள் பக்கம் வரும் என்று அ.தி.மு. க.வினர் நம்புகிறார்கள்.

இது தொடர்பாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரான வக்கீல் சேலம் மணிகண்டன் கூறும்போது:-

தமிழகத்தில் தி.மு.க. அரசு மீதான மக்களின் அதிருப்தியை ஓட்டுகளாக மாற்றி அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான காங்கிரசே அந்த கூட்டணியில் இருந்து விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேரவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு கூட்டணி ஏற்பட்டதால் மற்ற கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். அப்படி ஒரு கூட்டணி உருவானால் நிச்சயம் அதுவே அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி அமைத்து வரும் வியூகம் அ.தி.மு.க.வுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.