Tamilசெய்திகள்

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 11 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் – கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவு

காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எந்த உத்தரவையும் மதிக்காமல் தமிழகத்துக்கு போதிய தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. அணைகளில் தண்ணீர் இல்லை, குடிநீருக்கு பற்றாக்குறையாக உள்ளது என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

இதற்கிடையே, கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள 13.5 டி.எம்.சி. தண்ணீரை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் கர்நாடகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இருப்பினும் ஒழுங்காற்று குழு தலைவர் கர்நாடகத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டிப்பாக 11 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்றும் நவம்பர் 1-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்து வலியுறுத்தினார்கள். இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையத் துக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று மதியம் கூடியது. இந்தக் கூட்டத்தில் இன்று தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் கர்நாடகா, புதுச்சேரி, கேரளா அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது தமிழ்நாட்டுக்கு ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவெடுத்தபடி அக்டோபர் 27 வரை நிலுவையில் உள்ள 11 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.