Tamilசெய்திகள்

தெலுங்கானா சட்டசபை தேர்தல் – 17 ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிட இருக்கும் பா.ஜ.க

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பா.ஜனதா கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து பேரணியில் கலந்து கொள்கிறார். அப்போது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்கொண்டா, வாரங்கல், கட்வால், ராஜேந்திர நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக சோமாஜிபுடாவில் உள்ள பா.ஜனதாவின் மீடியா மையத்தில் வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பிடித்துள்ளன. காங்கிரஸ் ஆறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.