Tamilசெய்திகள்

தேமுதிக நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவிட்ட பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்விலேயே உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது மனைவியும் தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார்.
தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களிலும் உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியை தழுவி இருக்கும் தே.மு.தி.க.வை எப்படியாவது வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிரேமலதா செயல்பட்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தே.மு.தி.க.வை வலுப்படுத்த மாவட்ட செயலாளர்கள் கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள் தே.மு.தி.க.வை வலுப்படுத்தியும், வழி நடத்தவும் செயல் தலைவராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரேமலதாவிடம் வலியுறுத்தினார்கள். இளைஞர் அணியில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பதவியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகளுடன் பிரேமலதா தொடர்ந்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளான நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் பகுதி செயலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா கட்சியை மீண்டும் வலுப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். உங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளை முன் நிறுத்தி போராட்டங்களை நடத்தி அதன் மூலம் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் பிரேமலதா அறிவுறுத்தி உள்ளார்.

இன்று 2-வது நாளாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மயிலாடுதுறை, தஞ்சை, கரூர், நாமக்கல், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், திண்டுக்கல், திருவாரூர், திருச்சி, ஈரோடு, அரியலூர் மாவட்ட நிர்வாகிகளும், நாளை மறுநாள் (17-ந்தேதி) நடை பெறும் கூட்டத்தில் மதுரை, கோவை, ராமநாதபுரம், தென்காசி, தேனி, நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

ஆகஸ்ட் 25-ந்தேதி விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவது குறித்து கட்சியின் தொடக்க விழாவை கொண்டாடுவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.