Tamilசெய்திகள்

தொடர் மழையால் திருச்சியில் வெள்ளப்பெருக்கு

வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டு கனமழை பெய்தது. தீபாவளி பண்டிகை(4-ந் தேதி) முதல் 6-ந் தேதி வரை ஓய்ந்திருந்த மழை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய கனமழையாக பெய்தது.

இதுபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்தது. விராலிமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, இலுப்பூர், ஓலையூர் வழியாக வந்து ஏரிகளில் நிரம்பிய மழை உபரிநீர் மற்றும் மணப்பாறை பகுதியில் பெய்யும் மழைநீரால் உற்பத்தியாகும் அரியாறு வெள்ளம் ஆகியவை சேர்ந்து கோரையாற்றில் கலக்கிறது. அது வெள்ளமென பெருக்கெடுத்து திருச்சி மாநகர் எடமலைப்பட்டிபுதூர்-பஞ்சப்பூர் செல்லும் பாதையில் உள்ள தரைப்பாலத்தின் இருகரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும், திருச்சி மாநகரில் உள்ள உய்யகொண்டான் கால்வாய், குடமுருட்டி ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள், இடம் பெயர்ந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்சி மாநகரில் உள்ள் குமரன் நகர், பேங்கர்ஸ் காலனி விஸ்தரிப்பு, சாரதா அவன்யூ, உறையூர், குழுமணி, லிங்கா நகர், செல்வம் நகர் உள்ளிட்ட மாநகர் பகுதியிலும் மாவட்டத்தின் புலிவலம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வௌ்ளம் சூழ்ந்ததுடன் வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.

திருச்சி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள குழுமாயி அம்மன் கோவில் உள்ள உய்யகொண்டான் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மேலும் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் புறநகர் பகுதியான கோப்பு, எட்டரை, கொடியாலம், புலிவலம், அடப்பன்வயல் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெற்பயிர் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பராய்த்துறை கொடியாலம் பகுதிகளில் குடியிருப்புகளிலும், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
90 சதவீதம் ஏரி நிரம்பியது