Tamilசினிமா

நடிகர் இயக்குநர் பிரதாப் போத்தனின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது

தமிழ் சினிமாவில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் பிரதாப் போத்தன் (70) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1979-ஆம் ஆண்டு வெளியான தகர என்ற மலையாளப் படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். மேலும், பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

இதையடுத்து 1985-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதாப் போத்தன் இந்த படத்திறக்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருதினை பெற்றார். மேலும், இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

இதையடுத்து பிரதாப் போத்தன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல், சந்தான பாரதி, பூர்ணிமா பாக்யராஜ், பிரபு, கனிகா, என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பிரதாப் போத்தன் உடல் இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து சென்னை, கீழ்ப்பாக்கம் வேலங்காடு மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் பிரதாப் போத்தன் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்த பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.